இட ஒதுக்கீடு - வறுமையை
ஒழிக்கும் திட்டமும் அல்ல! வேலை வாய்ப்பை உண்டாக்கித் தருகிற திட்டமும்
அல்ல!!
- தோழர் கொளத்தூர் மணி
( கடலூரில் மஞ்சக்குப்பம் திடலில் 28. 04. 2007 அன்று தமிழக
சிந்தனையாளர் பேரவை என்ற அரசு ஊழியர்களின் அமைப்பின் சார்பில் நடைபெற்ற
விழாவில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின்
நிறைவுரை. )
தமிழக சிந்தனையாளர் பேரவையின் சார்பாக
இந்தக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கிற சிந்தனையாளர்
பேரவையின் தலைவர் மதிப்பிற்குரிய தோழர் இராஜமாணிக்கம் அவர்களே, இங்கு
திரையிடப்பட்ட ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ என்ற ஒரு அருங்காவியத்தைப்
படைத்து, எழுதி, நடித்து, இயக்கி இன்று ‘சிந்தனையாளர் விருதை’யும் பெற்று
அமர்ந்திருக்கிற தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் மதிப்பிற்குரிய நாடகத்துறைப்
பேராசிரியர் தோழர் மு. இராமசாமி அவர்களே, இங்கு பல்வேறு செய்திகளைப்
பகிர்ந்துகொண்டு எழுச்சியூட்டி அமர்ந்திருக்கின்ற பண்ருட்டி சட்டமன்ற
உறுப்பினர் தோழர் வேல்முருகன் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்
அவர்கள் விளித்துப் பேசிய அருமைப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என்
அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேரம் கடந்துவிட்டது என்றாலும், சில
செய்திகளைப் பகிர்ந்துகொள்கிற வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியை
ஏற்பாடுசெய்திருக்கிறார்கள் என்பதால் குறுகிய நேரத்தில் உங்களோடு சில
செய்திகளை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இட ஒதுக்கீடு, அதற்கு
வந்திருக்கின்ற இடைகாலத் தடை, இதை விவரிக்கப் போகும் முன்னால் இட
ஒதுக்கீடு என்பதை நாம் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை முதலில்
விளக்கியாக வேண்டும்.
இட ஒதுக்கீடு இப்பொழுது அரசுப்பணிகளுக்கு மட்டும் இருக்கிறது, அதை நாம்
நினைவில்கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பது ஒரு வறுமை ஒழிக்கும்
திட்டமும் அல்ல் வேலை வாய்ப்பை உண்டாக்கித் தருகிற திட்டமும் அல்ல.
இருக்கிற வேலைகளுக்கு இருக்கிற இடங்களைப் பகிர்ந்துகொள்கிற ஒரு ஏற்பாடு.
அதற்கு முன்னால் அது வகுப்புவாரி உரிமையாக, வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவமாகத் (communal
representation) தான் இருந்தது. நூறு
இடங்களும் பகிர்ந்து வழங்கப்பட்டன. இதற்கு நமக்கு எண்பது ஆண்டு வரலாறு
உண்டு.
தமிழ்நாட்டில் 1920; களிலிருந்து இட ஒதுக்கீடு இருந்து வந்தது. அதற்கும்
முன் கோல்ஹாப்பூர் போன்ற சிற்றரசுகள் 1902 ஆம் ஆண்டிலேயே
அறிமுகப்படுத்தினார்கள். மைசூர் சிற்றரசும் 1921 ல் இட ஒதுக்கீட்டை
அறிமுகப்படுத்தியது. ஆனால் பிரிட்டீஷ் இந்தியாவில் சென்னை மாகாணத்தில்
தான் அந்த இட ஒதுக்கீடு முதன்முதலாக நடைமுறைக்கு வந்தது. நடைமுறைக்கு
வந்த அந்த இட ஒதுக்கீடு, சென்னை மாகாண அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு
சென்னை மாகாண அரசில் இருக்கிற பணிகளுக்கு, கல்வி நிலையங்களுக்கு
மட்டுமில்லை, பெரியார் போன்ற புரட்சியாளர்களின் போராட்டத்தின் காரணமாக அது
விரிவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்திலிருந்த மத்திய அரசு அலுவலகங்களிலும்
இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1934 ஆம் ஆண்டு இதற்கான ஒரு சிறப்பு அரசாணை
பிறப்பிக்கப்பட்டது. சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இட ஒதுக்கீடு
ஆணையை மத்திய அரசு பிறப்பித்தது. அதன்படி சென்னை மாகாணத்தில் மட்டும்
அஞ்சல் நிலையங்களில், அப்பொழுதிருந்த இம்பீரியல் வங்கியில், அப்பொழுது
தனியார் இயக்கிவந்த தென்னிந்திய இரயில்வே, தென் மராத்தா இரயில்வே, அவை
1944 ல் அரசுடைமையான பின்னால் அதில், எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு
நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால் அந்த இட ஒதுக்கீடு விடுதலை
பெற்றதாகச் சொல்லப்பட்ட ஆகஸ்டு 15, 1947க்குப் பின் மத்திய அரசின் இட
ஒதுக்கீட்டை, சென்னை மாகாணத்தில் மட்டும் கொடுக்கப்பட்டு வந்த இட
ஒதுக்கீட்டை 1947 செப்டம்பர் 30 ஆம் நாள் இரத்து செய்துவிட்டார்கள்.
ஒன்றரை மாதம் தான் அவர்களால் பொறுத்துகொள்ள முடிந்தது. விடுதலை வந்தது
யாருக்காக என்று பெரியார் சொல்வார்: வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பன
கொள்ளைக்காரனுக்கு made over செய்யப்பட்டது என்று சொல்வார். அவர்களால்
விடுதலை பெற்ற ஒன்றரை மாதத்தில், நமக்குக் கொடுத்து வந்த இட ஒதுக்கீடுகளை
மத்திய அரசில் கொடுத்து வந்த இட ஒதுக்கீடுகளை அவர்கள் இரத்து செய்தார்கள்.
உள்துறை இரத்து செய்தது, இரயில்வே துறை இரத்து செய்தது, எல்லோரும் இரத்து
செய்தார்கள், ஒரே நாளில். இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டது. அரசியல்
சட்டத்தில் சில விதிகளைச் செய்தார்கள். பாதுகாப்புக் கொடுப்பதற்காக,
பல்வேறு விதிகள் செய்யப்பட்டன. 16 என்ற விதி வேலை வாய்ப்புகளுக்காக, 46
என்றவிதி ((weaker
section) ) நலிவடைந்த பிரிவினர் மேம்பாட்டிற்காக,
எனப் பல சட்டங்களைச் செய்தார்கள். ஆனால் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
மட்டும் இடஒதுக்கீட்டை உறுதிசெய்தது. சட்டத்தில் எழுதி வைத்தார்கள்,
சிறப்பு ஒதுக்கீடு செய்யலாம் என்று. 16(4) என்ற விதி சொன்னது: எந்தச்
சமுதாயப் பிரிவினருக்கு அரசுப்பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை
என்று அரசு கருதுகிறதோ அவர்களுக்கு சிறப்பு உதவி செய்யலாம் என்று அதில்
போடப்பட்ட சொற்கள் “பேக்வேர்ட் கிளாஸ்” என்பது. அந்த சொல் தான்
தாழ்த்தப்பட்டோரை, பழங்குடியினரை எல்லோரையும் குறித்தது. ஆனால் அதில்
இன்னொன்று சொன்னார்கள், அரசியல் சட்டம் எழுதப்பட்ட பொழுது அதில்
போடப்பட்ட வார்த்தை ‘in
the opinion of the government’ என்று தான் சொன்னார்கள் அதை. அரசின் பார்வையில் எந்தெந்தச்
சமுதாயத்திற்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதுகிறதோ
அவர்களுக்கு இடஒதுக்கீடு செய்யலாம் என்பது தான் அந்தச் சட்டப் பிரிவு.
அரசியல் நிர்ணய சபையில் விவாதம் வந்த போது
கூட கேட்டார்கள், யார் இந்த பேக்வேர்ட் கிளாஸ் என்று, அதற்கு அம்பேத்கார்
சொன்னார், ‘in
the opinion of the government’- அரசு
யாரைக் கருதுகிறதோ என்று பதில் சொன்னார் - அது பதிவாகியிருக்கிறது.
இப்பொழுது எதையெதையோ சொல்லியெல்லாம் அரசியல் நிர்ணய சபையில் வாதிதத்தை
சொல்கிறார்கள். ஆனால் ‘in
the opinion of the government’ என்பதை விட்டுவிட்டார்கள். சரி, இட
ஒதுக்கீடு வேலை வாய்ப்பில் இருந்தது. ஆனால் கல்வியில் அப்போது
வழங்கப்படவில்லை. நம்முடைய அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது;
அறிமுகப்படுத்தப்பட்ட போது வேலை வாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு அதற்கான
பிரிவுகள் இருந்ததே தவிர கல்விக்கு எவ்வித ஒதுக்கீடும் இல்லாமல் இருந்தது.
அதனால் தான் தமிழ்நாட்டில் இங்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின்
அடிப்படையில் மருத்துவக்கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்று சொல்லி ஒரு
பார்ப்பன பெண் 1950 ல் தொடர்ந்த வழக்கு நம் தமிழ்நாட்டு ‘கம்யூனல் ஜீ.ஓ’
என்ற வகுப்புவாரி ஆணையை இரத்து செய்தது. அது நீண்ட கதை. அந்த வழக்கைப்
போட்டவர் செண்பகம் துரைராஜன். நீதிமன்றம் நமக்கு எப்படியெல்லாம் தடையாக
இருக்கிறது என்பதைச் சொல்லவேண்டும். உயர்நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு
செல்லாது என்று சொன்னார்கள். உச்சநீதிமன்றத்திற்குப் போனது அரசு. பெரியார்
சொன்னார்: “அசலே அநியாயம் அப்பீல்ல அதே காயம், அப்படித்தான் ஆகப்போகுது,
உச்சநீதிமன்றத்தில் போனால் என்ன ஆகும் என்று சொன்னார்”. ஆனால்
உச்சநீதிமன்றத்தில் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இந்த செண்பகம் துரைராஜன்
என்ற அந்தப் பெண் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பமே போடவில்லை என்பதைக்
கண்டுபிடித்தார்கள். வழக்கே நான் பார்ப்பனத்தி என்பதால் தான் எனக்கு இடம்
வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிற இடஒதுக்கீட்டுக் கொள்கை
தடைசெய்துவிட்டது என்று வழக்கு போட்டிருந்தார். ஆனால்
உச்சநீதிமன்றத்திற்குப் போன பின்னால்தான் தெரிந்தது, அந்தப்பெண்
மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பமே போடவில்லை. சரி போடமுடியவில்லை,
போடுகிற வயதையும் தாண்டியவர், 34 வயதானவர் அவர். விண்ணப்பிக்கிற வயதைக்
கடந்துவிட்டவர் அவர். விண்ணப்பிக்கிற தகுதியில்லாத பெண் விண்ணப்பிக்காத
இடத்திற்காகப் போடப்பட்ட வழக்கில் தான் இட ஒதுக்கீடு செல்லாது என்று
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதற்குப்பின்னால் தமிழ்நாட்டில் நடந்தது பெரும் போராட்டம். அந்தச்
சட்டத்திருத்தத்தை ஜவகர்லால் நேரு அவர்கள் முன்மொழிகிறபோது கூட அவர்
சொன்னார் சட்டத்திருத்தம் ஏன் வருகிறது என்று சொல்லவேண்டும், அறிமுக
உரையாற்றவேண்டும், அப்போது அவர் சொன்னார், சென்னை மாகாணத்தில் நடந்த
நிகழ்வுகள் நம்மை சட்டத்திருத்தத்தைச் செய்ய வலியுறுத்துகிறது என்று
சொன்னார். அவர் சொன்னது ‘ . . in madras province’ என்று தான் சொன்னார். அதன் காரணமாகத்தான் சட்டத்திருத்தம் என்று சொன்னார்.
சட்டத்திருத்தம் வந்தது. அதில் போடப்பட்ட சொல்தான் அரசியல் சட்டம் 16 ல்
‘பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்று மட்டும் இருக்கிறது ‘backward classes not
adequately represented’ என்றுதான் 16(4) சொல்கிறது. ஆனால் 15(4)
என்கிற ஒரு புதுப்பிரிவு சேர்க்கப்பட்டது, அந்தப்பிரிவு கல்விக்காக அதை
சொல்கிறபோது சொற்களைப்போட்டார்கள் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும்
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று (socially
and educationally backward). அப்போதும்
சிலபேர் திருத்தம் கொண்டுவந்தார்கள். எகனாமிகலி (economically) என்ற சொல்லையும் சேர்க்கவேண்டும். சமூதாயத்திலும் கல்வியிலும் பின்
தங்கிய சமூகத்திற்கு என்று இருப்பதை பொருளாதாரத்திலும் பின்தங்கிய என்ற
சொல்லை சேர்க்க வேண்டி திருத்தம் கொண்டு வந்தார்கள்- அதை எல்லோரும்
மறுத்தார்கள். நேரு மறுத்தார். அம்பேத்கர் மறுத்தார். எல்லோரும் விளக்கிச்
சொன்னார்கள். வுhக்கெடுப்பிற்கு விடப்பட்டது. 1950 ஜனவரியில் வந்த
சட்டத்திற்கு சட்டதிருத்தம் 1951;;; ஜூன் மாதத்தில் வருகிறது. ஓன்றாம்
தேதிதான் வாக்கெடுப்பிற்கு விடுகிறார்கள். பொருளாதார ரீதியாக என்ற சொல்லை
சேர்க்கக் கூடாது என்று எல்லோரும் வாதிடுகிறார்கள். வாக்கெடுப்பிற்கு
விடுகிறார்கள். பொருளாதார ரீதியாக என்ற சொல் சேர்க்கப்படக்கூடாது என்று
243 பேர் வாக்களித்தார்கள்; வேண்டும் என்று 5 பேர் வாக்களித்தார்கள். ஆக
இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் பொருளாதார ரீதியாக என்பது மறுக்கப்பட்டது.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்று சொன்னால், அரசியல் சட்டத்தை எழுதிய அரசியல்
நிர்ணய சபை, அது கலைக்கப்படவில்லை, நடைமுறையில் இருந்துகொண்டு வருகிறது.
அது 243 க்கு 5 என்ற கணக்கில் மறுக்கப்பட்டது பொருளாதார ரீதியாக என்ற
சொல்லை சேர்ப்பதற்கு. ஆனால் இப்பொழுது நீதிபதிகள் பொருளாதார ரீதியாக
என்பதைத்தான் ‘கிரீமி லேயர்’ (creamylayer)
என்று சொல்கிறார்கள்.
இரண்டரை இலட்சம் வருமானம் வந்தால் இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்கிறார்.
ஆனால் இவர் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்கிறாரகள்;. அப்பொழுது
தீர்மானம் கொண்டு வந்தவர் யார் என்றால் இப்பொழுது பாரதீய ஜனதாவாக இயங்கிக்
கொண்டிருக்கிற அமைப்பின் தாய் அமைப்பான ஜனசங்கத்தை உண்டாக்கிய சியாம்
பிரசாத் முகர்ஜி (எஸ். பி. முகர்ஜி) என்பவர் தான் தீர்மானத்தைக்
கொண்டுவந்தார் பொருளாதார ரீதியாக சேர்க்கவேண்டுமென்று. அப்பொழுது தொடங்கி
அவர்களுடைய இயக்கம் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது. ஆக பொருளாதார
ரீதியாக என்ற சொல் மறுக்கப்பட்டது என்பது ஒரு செய்திக்காகச் சொல்கிறேன்.
அதற்குப் பின்னால் தான் சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின்தங்கிய என்கிறபோது
தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு என்று
மூன்றையும் சொன்னார். 16(4) வெறும் பேக்வார்ட் கிளாஸஸ் என்று மட்டும்
சொல்லியது. இது விளக்கமாக மூன்றையும் சொல்லியது. பெரியார் கூட கேட்டார்:
நீ தெருவுக்கு நாலு பைப் போட்டுக் கொடுத்துடுற, தண்ணீ பிடிச்சுக்கன்னு
சொன்ன, ஆனால் டேங்குக்கு தண்ணீ விடலையேன்னார். வேலை வாய்ப்புக்கு இட
ஒதுக்கீடு கொடுத்துட்டீங்க, எங்க ஆள் படிக்கவேயில்லையே, அப்பறம் எப்படி
வேலைவாய்ப்புக்கு போய் நிற்பான். பைப்பை மட்டும் போட்டுக் கொடுத்துட்ட,
முதல்ல டேங்குக்கு தண்ணீ விடுன்னார். எனவே அந்தத் திருத்தம் வந்தது.
அதனால் தான் நமக்கு கல்வியில் இடஒதுக்கீடு செய்யலாம் என்ற நிலை உண்டானது,
சட்ட ரீதியாக. 1951 ல் வந்த சட்டம், மத்திய அரசின் நாடாளுமன்றமாக அப்போது
கருதப்பட்ட அரசியல் நிர்ணய சபை கொண்டு வந்த சட்டத்திருத்தம், அதே மத்திய
அரசால் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தான் இங்குள்ள வெட்கக்
கேடான செய்தி. கல்வியில் இட ஒதுக்கீடு தரலாம் என்று சொல்லிவிட்டார்கள்,
பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்,
திருத்தம் வந்துவிட்டது, ஆனால் அந்தச் சட்டத்திருத்தம் பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு கொடுப்பதற்கு, அதை ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவை 1953 ஆம் ஆண்டு
நியமித்தார்கள்.
அரசியல் சட்டத்திலேயே சில பிரிவுகளை வைத்தார்கள்; 340 என்ற ஒரு பிரிவு
இருக்கிறது, அதுதான் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கு
மேம்பாடுக்கான திட்டங்களை செய்வதற்கு ஒரு குழுவை அமைக்கலாம் என்று
பரிந்துரைக்கிறது, பரிந்துரைத்தது, அமைத்தார்கள், 1953 ல் அமைக்கப்பட்ட
குழுவிற்கு தலைவர் காகா கலேகர் என்பவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
என்ன இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்பதைபற்றி ஆலோசிப்பதற்கு ஒரு பார்ப்பனரைத்
தலைவராகக்கொண்ட குழுவை அமைக்கிறார். அந்தக்குழு ஆய்வுசெய்தது. அது இரண்டு
ஆண்டுகள் ஆய்வு செய்து 1955ல் ஒரு அறிக்கை கொடுக்கிறது. அது சில சாதிகளை
பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வகைப்படுத்துகிறது. 2399 சாதிகளை
வகைப்படுத்துகிறது. வகைப்படுத்தியதோடல்லாமல், இன்னொரு சிறப்பான
புரட்சிகரமான ஒன்றைச் செய்தார். பெண்கள் எல்லோரும் பிற்படுத்தப்பட்டோர்
என்று அறிவித்தாரகள்;, பரிந்துரை எழுதினார்கள். தொழிற்கல்வியில் 70
விழுக்காடு, மூன்றில் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்தார். அப்புறம் அடுத்தது
அரசுப்பணிகளில் ஒவ்வொன்றாக சொல்லும் போது 40, 33.3, 25 என்று குறைத்து
சொன்னார். ஆனால் அவர் பரிந்துரைத்தது 70 விழுக்காடு. அறிக்கையை அப்படி
எழுதிவிட்டு, அறிக்கையை அரசுக்கு அனுப்பினார். அதிலே ஒரு கடிதம் வைத்து
அனுப்பினார். பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு
அறிக்கையில் எழுதியிருக்கிறேன். ஆனால் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு
தருவதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று தனிப்பட்ட கடிதம் வைத்து
அனுப்பினார். எப்படி இவருடைய அறிவு நாணயம் இருக்கிறது என்று பாருங்கள்.
குழு கூடி இரண்டாண்டு ஆய்வு செய்து அறிக்கை எழுதிவிட்டு, அறிக்கையில்
கையெழுத்து போட்டுவிட்டு அதோடு இணைப்புக்கடிதத்தில் மட்டும் சாதி
அடிப்படையில் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று பரிந்துரை செய்தார். அதில்
இன்னொன்றையும் செய்தார். இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோமே 1931 மக்கள்
தொகை கணக்கெடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமே; மக்கள் தொகை
கணக்கெடுப்பு சாதி வாரியாக எடுக்கலாம் என்று 1881 ல் தான் நடைமுறைக்கு
வந்தது. அதற்கு முந்தியே மக்கள்தொகை கணக்கெடுப்பு வந்திருச்சு 1871 ல்
சென்னை மாகாணத்திலிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பினுடைய தலைமை அலுவலர் தான்
டபிள்யூ. கார்னீஷ் என்பவர் இருந்தார். அவர்தான் சொன்னார் நம் அரசின்
ஆய்வில் ஒன்று தெரிகிறது, அரசு மக்கள் நோயை பார்ப்பனக்கண்ணாடி கொண்டுதான்
பார்க்கிறது ((spectacles
of Brahmin). அதற்கு prescription நோய் தீர்ப்பதற்கும் பார்ப்பன மருத்துவத்தைத் தான் தருகிறது.
1881 ல் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது.
ஒவ்வொருவரையும் சாதியைக் குறிப்பிட்டு எடுத்தனர். 1931 வரை நடந்தது. 1941
ல் இரண்டாம் உலகப்போர். சரிவர கணக்கெடுப்பு நடத்தமுடியவில்லை. 1951 ல்
விடுதலை பெற்ற இந்தியா சாதிவாரியாகக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டாம் என்று
அறிவுரை சொல்லிவிட்டது. இதுவரை சாதிவாரியாகக் கணக்கெடுப்பு
எடுக்கப்படவேயில்லை. சாதிவாரி எடுக்கப்பட்ட கடைசி கணக்கெடுப்பு 1931 ல்
தான். அதற்குப் பின்னர் எடுக்கப்படவில்லை. இதுவரை பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு, நலத்திட்டங்கள் தீட்டுகிறபோதெல்லாம் அந்த மக்கள்தொகை
கணக்கெடுப்பை வைத்துகொண்டுதான் கணக்கிடு;கிறார்கள். புதிது இல்லை. ஆக
1955 ல் காகா கலேகர் பரிந்துரைகளில் ஒன்றாகக் கொடுத்தது: சாதிவாரியாக
மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று சொன்னது. 1931 ஆம் ஆண்டோடு
நிறுத்திவிட்டார்கள், 1941 லே எடுக்கல, 1951 ல எடுக்கல. 1955 ல் பரிந்துரை
கொடுத்தார்கள் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்பது.
அதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குப்பின் மிக
நீண்டகாலம் பிற்படுத்தப்பட்ட மக்களைப்பற்றி கவனிக்கவில்லை
என்பதுமட்டுமல்ல 1961-ஆம் ஆண்டு எப்படி இந்தப் பார்ப்பனர்கள்
எங்கிருந்தாலும் எந்த அமைப்பில் இருந்தாலும் என்ன முற்போக்கு பேசினாலும்,
நாங்கள் அடிக்கடி சொல்வது நாத்திகம் பேசுவதால் பெரியாரை வெறும்
நாத்திகராக மட்டும் பார்த்துவிடாதீர்கள், அதற்கும் மேல் ஒரு சமுதாய அக்கறை
இருந்தது. அவருடைய கவனம் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்கள் மீது இருந்தது.
நாத்திகன் என்று பார்த்தால் நாட்டின் பெருங்கேடாக இன்று விழைந்திருக்கிற
இந்துத்துவா என்ற சொல்லாடலைக் கொண்டு வந்த சாவர்க்கர், அதற்காக இந்து மகா
சபையை நடத்தியவர், அவர்களுக்கு எதிராகப் போனதால் காந்தியைக் கொல்ல
திட்டமிட்ட சாவர்க்கர் நாத்திகர். கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால்
பார்ப்பனன் உயர்ந்தவன் என்று சொல்பவர். பார்ப்பனனுக்குத் தான் அதிகாரம்
வேண்டும் என்று சொன்னவர். வேதம் தான் உயர்ந்தது என்று சொல்பவர். இந்து
மகா சபையினுடைய கொள்கையே வேத காலத்திற்குத் திரும்புவோம் என்பது தான். ஒரே
ஒரு சொல்தான் கொள்கை அவங்களுக்கு, இந்தியாவை வேதகாலத்திற்கு திருப்பியும்
கூட்டிட்டுப் போகனும். எப்படி இருக்கும் என்று அப்புறம் நீங்கள்
யோசித்துக் கொள்ளலாம். அவர் நாத்திகர். நம்ம கமலஹாசன் கூட நாத்திகர் தான்.
ஆனால் இட ஒதுக்கீடு தப்பு என்கிறார். அப்படித்தான் நேருவும் நாத்திகர்.
நேருவும் தன்னை சோசலிசவாதியாகச் சொன்னார். அவர்தான் முதல் சட்டத்
திருத்தம் வந்தபோது ‘எக்கனாமிகலி’ என்ற சொல் சேர்க்கக்கூடாதென்று
வாதாடினார். 1961-யில் எல்லா அரசுகளுக்கும் ஒரு கடிதம் எழுதப்பட்டது,
‘டெமி அபிசியல் லெட்டர்’ - எழுதப்பட்டது. பிரதமரே எழுதினார். எல்லா
முதலமைச்சர்களுக்கும். இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
‘பேக்வார்ட் கிளாஸ்’என்று சொல்கிற போது முடிந்தவரை பொருளாதாரத்தில் பின்
தங்கியோருக்குக் கொடுங்கள். சாதி ரீதியாக கொடுப்பதை நான் விரும்பவில்லை.
1951 ல் ஒன்றைப் பேசியவர் 1961 ல் மாற்றிப் பேசுகிறார் - எல்லா
முதலமைச்சர்களுக்கும் எழுதுகிறார், சாதி அடிப்படையில் கொடுப்பதற்கு
மத்திய அரசு விரும்பவில்லை என்று எழுதுகிறார். அமைச்சராக இருந்தாலும்
நீதிபதியாக இருந்தாலும் அவர்களுடைய சிந்தனை எப்படியிருக்கிறது
என்பதற்காகச் சொல்கிறேன். பெரியார் சொல்வார், வெளிப்பகட்டிற்கு
புரட்சியாளனாகவும் உள்ளே பார்ப்பனனாகவும் வாழ்ந்தவர் நேரு என்று
சொல்லுவார். அவருடைய அப்பா இறந்த பொழுது பூணூல் போட்டுக்கிட்டு
சட்டையில்லாமல் சடங்கு செய்ததற்காகச் சொல்கிறார். அதை விடுங்கள்.
அடுத்து இப்படிப்பட்ட பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு என்ன உதவிகள் செய்யலாம் என்பதைப்பற்றி ஆய்வதற்கு அடுத்த குழு
அமைக்கப்படவே இல்லை. 1953 ல் அமைத்தது, மீண்டும் 1979 ல் தான் சரண்சிங்
அவர்கள், அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்தார், அவர்தான் நியமிக்கிறார்,
மொரார்ஜி பிரதமர், அவரும் ஒத்துக்கொள்கிறார். சரண்சிங் மாகாணத்திற்கு ஒரு
பெரியார் வேண்டும் என்ற நூலை எழுதியவர், அது நமக்குத் தெரியாது.
விவசாயிகள் நலன்களுக்காகப் போராடிய ஒருவர் என்று தான் தெரியும். அவர்
மாகாணத்திற்கு ஒரு பெரியார் வேண்டும் என்ற ஒரு சிறு வெளியீட்டை
வெளியிட்டவர். அவர்தான் இந்த மண்டல் குழுவை நியமித்தார். இப்பொழுது
தலைவராகப் போடப்பட்டவர் ஒரு பிற்படுத்தப்பட்டவர். ஒரு வழக்கறிஞர், பீகார்
முதலமைச்சராக இருந்தவர், பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் - பி.பி.மண்டல்
என்கிறவர் தலைமையில் அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு
உட்கார்ந்த இடத்திலிருந்து ஆய்வு செய்யவில்லை. இந்தியாவில் அப்பொழுது 406
மாவட்டங்கள் இருந்தன. 405 மாவட்டங்களில் போய் அவர்கள் ஆய்வுக் கூட்டங்கள்
நடத்தினார். ஒரே ஒரு மாவட்டத்திற்கு போகமுடியவில்லை, பெரும் மழை காரணமாக
அஸாமில் இருந்த அந்த மாவட்டத்திற்கு போகாமல் வந்துவிட்டார்கள். 405
மாவட்டத்திற்குப் போகிறார்கள். எம்.என்.சீனிவாஸ் போன்ற மானுடவியல்
அறிஞர்களுடைய கருத்துக்களை கேட்டார்கள். டாடா நிறுவனம், டெல்லி
பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பிரிவு போன்ற அமைப்புகளை வைத்து ஆய்வு
செய்தார்கள். அவர்களிடம் அறிக்கையெல்லாம் வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு
அறிவியல் பூர்வமாக பட்டியலிட்டார். இவர்கள் எல்லாம் குறை சொல்கிறார்கள்,
ஒரு நீதிபதி உட்கார்ந்து கொண்டு. அவர் எப்படியெல்லாம் பட்டியலிட்டார்
என்பதை மண்டல் அறிக்கையை படிக்கும்போது நமக்குத் தெரியும்.
பிற்படுத்தப்பட்ட மக்களை சமூக ரீதியாக, கல்வி ரீதியாக
பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தான் எடுக்கவேண்டும் என்றாலும் கூட அவர்
பொருளாதாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டார். சமூக ரீதியாக என்று
பார்க்கிறபோது 17 வயதிற்குக் கீழ் திருமணமாகிற பெண்கள் முதலில் ஒன்று
எடுக்கிறார், அது கிராமத்தில் இருந்தால், நகரத்தில் இருந்தால் என்று
விழுக்காடு கணக்கு எடுத்தார். 25 விழுக்காடு மாநில சராசரிக்கு அதிகமாக
திருமணம் செய்பவர், நகரமாக இருந்தால் 10 விழுக்காடு அதிகம் திருமணம்
செய்த சாதிகள் என்று பிரிக்கிறார். உடலுழைப்பை 50 விழுக்காடு அதிகமாக
செய்கிற சாதிகளை பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று சொல்கிறார். நான்கு
வகையாகப் போட்டு அது ஒவ்வொன்றுக்கும் 3 மதிப்பெண்கள் போடுகிறார். கல்வி
என்று வருகிற போது தொடக்கக் கல்விக்கே போகாதவர்கள் மாநில சராசரிக்கு மேல்
25 விழுக்காடு இருந்தால் அந்தச் சாதிகள்; பள்ளிப்படிப்பை முடிப்பதற்குள்
விலகுகிறவர்கள் ‘டிராப் அவுட்ஸ்’ மாநில சராசரியை விட 25 விழுக்காடு
அதிகமாக இருக்கிற சாதிகள், இதையெல்லாம் இப்படியொரு பட்டியல் எடுக்கிறார்.
அதற்கெல்லாம் 2 மதிப்பெண்கள். அப்பறம் பொருளாதார ரீதியாக என்று வருகிறபோது
ஓலைக்குடிசையில் வசிப்பவர்கள் மாநில சராசரியை விட 25 விழுக்காடு அதிகமாக
இருக்கிற சாதிகள்; குடி நீருக்காக அரை கிலோமீட்டருக்கு மேல் நடந்து
போகிறவர்கள்; மாநிலத்தில் கடனை மாநில சராசரிக்கு மேல் பெற்றிருக்கிற
குடும்பங்கள் இப்படியெல்லாம் கணக்கெடுத்து 22 மதிப்பெண் போட்டு அதில்
எந்த சாதி 11 மதிப்பெண்களுக்கு மேலிருக்கிறதோ அந்த சாதியெல்லாம்
பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று அறிவிக்கிறார்; இவ்வளவு ஆராய்ச்சிக்குப்
பின்னால் அவர் அறிவிக்கிறார். அறிவித்தது மட்டுமல்ல அந்த சாதிகளை
வகைப்படுத்தி எழுதிவிட்டு இந்த சாதிகளுக்குப் பரிந்துரை தருகிறார்;
பரிந்துரையைப் பற்றி விரிவாகப் பேசினால் நேரமாகிவிடும்.